Thursday, October 25, 2012

தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடம்


இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப் படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை மிகவும் அலாதியானது. அவர் முழுக்க முழுக்க இறைவனுக்குக் கட்டுப் பட்டவராகவும் இறைக்கட்டளைகள் எதுவானாலும்  சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றுபவராகவும் இருந்தார். இறைவன் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையும் ஈடிணையில்லாதது. சிலைவங்கிகளாயிருந்த தன் நாட்டு மக்களுக்கிடையே தனிநபராக நின்று சத்தியப்பிரச்சாரம் செய்து அதன் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டார். இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக தனது ஆருயிர் மனைவியையும் பச்சிளம் பாலகனையும் ஒரு பாலைவனத்தின் நடுவெளியில் விட்டுவிட்டு வந்தார். இவ்வாறு தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பரீட்சைகளையும் ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றி வந்தார். இறைவன் அனைத்து சோதனைகளிலும் அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றவும் செய்தான். அவருக்கு உச்சகட்டமாக வைக்கப் பட்ட ஒரு பரீட்சையை மனிதகுலம் நினைவுகூரவும் அதன் படிப்பினையை வாழ்வில் கடைப் பிடிக்கவுமே முஸ்லிம்களால் பக்ரீத் அல்லது தியாகத் திருநாள் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அது என்ன சோதனை?
இந்தப் பரீட்சை வாழ்வில் நமக்கு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள உடல், பொருள் ஆவி என எதுவுமே நமதல்ல. இதன் உண்மை உரிமையாளன் இறைவன்தான் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு இரவலாக இறைவன் தந்துள்ள இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்டால் அதை திருப்பிக் கொடுக்க நம்மில் யாருக்குத்தான் எளிதாக மனது வரும்? உதாரணமாக நம்மிடம் யாசிக்க யாராவது ஏழைகள் வந்துவிட்டால் அல்லது நம்மிடம் உபரியாக உள்ள செல்வத்தின்பால் தேவையுடையவர்கள் நம்மிடம் வந்து இறைஞ்சிக் கேட்க வந்துவிட்டால் நம் மனநிலை எப்படி மாறுதல் அடைகிறது? நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் இப்ராஹீம்(அலை- அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகுக) அவர்களிடம் இறைவன் கேட்டது அவர் தள்ளாத வயதில் அற்புதமாகப் பெற்றெடுத்த மகனையல்லவா இறைவன் தனக்காக தியாகம் செய்யுமாறு கேட்டான்! அதுவும் அந்த ஆருயிர் மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் பணித்தான்!அதையும் எவ்விதத் தயக்கமும் இன்றி நிறைவேற்றத் துணிந்தார் இப்ராஹீம்(அலை) அவர்கள். உடனேயே இறைவன் அவரது பரீட்சையில் அவர் வெற்றிபெற்று விட்டதை அறிவித்து அதற்குப் பகரமாக இரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு பணித்தான்.
இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் இவ்வாறு கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார்.
என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.
 இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (அல்குர்ஆன் 37 : 100-111)

 

 அந்த தியாகச் செம்மலின் இச்செயலை உலகுள்ளவரை மனிதகுலம் என்றும் நினைவு கூர வேண்டும் அதிலிருந்து இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் பாடத்தை அவர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருமுறை அந்நாளைத் தியாகத் திருநாளாகக் கொண்டாடும்படி பணித்தான்.

இத்தியாகத்தின் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் முகமாக வசதியுள்ள அனைத்து இறைவிசுவாசிகளும் தங்களால் இயன்ற ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ பலிகொடுத்து அதன் இறைச்சியை உறவினர்களோடும் எழைகளோடும் பங்கிட்டு உண்ணுமாறு பணித்துlள்ளாள்ளான் இறைவன். மாட்டையும் ஆட்டையும் ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் பலி கொடுக்கலாம். இன்று செல்வ வளமுள்ள நாடுகளில் இவ்வாறு பலி கொடுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சி பதப்படுத்தப் பட்டு   ஏழை நாடுகளில் உள்ள மக்களிடையே விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. ஏழைகளின் உணவுத் தேவை நிறைவேறுதல், சகோதர உணர்வு பகிர்தல் உறவினர்களோடு உறவைப் புதுப்பித்தல் என்பன போன்ற பல நன்மைகளை இந்நாள் தாங்கி வந்தாலும் இறைவன் முக்கியமாக பார்ப்பது நம் இறையச்ச உணர்வைத்தான். இதோ தனது திருமறையில் கூறுகிறான்:
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22 : 37)

இத்தியாகத்திருநாளில் முக்கியமாக நாம் பெறவேண்டிய பாடங்கள் இவையே:
= இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தில் நம்மைப் பரீட்சிப்பதற்காக நம்மிடம் அமானிதமாகத் தரப்பட்டுள்ளவையே நமது உயிரும், உடலும், உறவுகளும், உடமைகளும். இவற்றை நமது என்று சொல்லிக் கொண்டாலும் இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே.
= இரவல் தந்தவன் இவற்றைத் திருப்பிக் கேட்கும்போதும் எடுக்கும்போதும்  நாம் உணர்ச்சிவசப்பட்டு ஏசுவதோ அவனது சாபத்தைப் பெற்றுத் தரும் வார்த்தைகளோ உச்சரிப்பதோ கூடாது. அவ்வாறு நாம் அவற்றை இழக்க நேரிடும்போது பொறுமையை மேற்கொள்வதோடு இறைவன் இச்சோதனைக்கு நிச்சயமாக மறுமையில் பரிசு தருவான் என்ற உறுதியான நெஞ்சோடு இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
2:155.-157.: ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி  பெற்றோர்.  
= எந்த அளவுக்கு இறைவனுக்கு நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக ஆகிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக நாம் சோதிக்கப்படுவோம். எந்த அளவுக்கு நாம் சோதிக்கப்படுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனிடம் நமக்கு வெகுமதிகளும் உயர் பதவிகளும் காத்திருக்கின்றன.
= இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது ஆருயிர் மகனை இறைக் கட்டளைக்காக பலி கொடுக்கத் துணிந்தார்கள். நாம் குறைந்த பட்சம் நம் தேவை போக மேல்மிச்சமாக நம்மிடம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை இறைவழியில் அர்பணிக்க முன்வரவேண்டும்.   

No comments:

Post a Comment