சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)
\\மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள
இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது
விடுதலைஅடைந்தவர்களானார்கள் என்பதற்காக மகிழ்ச்சியடைகின்றேன்.
அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன்
அவர்களைப் பறையன்,சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை
விட்டு வெளியில் குடி இருக்க
வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.
வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர்
வளர்த்துக் கொண்டும்,பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்;எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.
எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து
ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை,நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால்,வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி
நினைக்கச் செய்கின்றது.
ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும்
கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில்
இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமானஅபிப்பிராயம்.
நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல
காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது
உண்மையானால், அதில் சேர்ந்த
இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து
மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும்
அல்லவா?
ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய்
முகமதியர் ஆவதைத் தவிர வேறு
மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோகவலையுள்ளவர்களுக்கு
இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி
வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத்
தயாராயிருக்கிறேன்.